மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வசித்து வருபவர் செல்லம்(19). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள துவாரபதி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்லம் அடிக்கடி துவாரபதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம் என்பதால், அப்போதுதான் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், நேற்று செல்லம் துவாரபதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது காதலியான 17 வயது சிறுமியை உறவினர் ஒருவரின் வீட்டில் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்லம் அந்த வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து காதலியைச் சுட்டுள்ளார். இதில் சிறுமி ரத்த வெள்ளத்தில் கீழே சரிய, சத்தம் கேட்டு ஒடிவந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நத்தி வருகின்றனர்.
இதனிடையே தப்பி ஓடிய செல்லம், தன்னை போலீஸ் பிடித்துவிடும் என்று நினைத்து, தற்கொலை செய்துகொள்வதற்காக எலி மருத்தைச் சாப்பிட்டுள்ளார். பின்பு துவாரபதி கண்மாய் கரையில் மயங்கி விழுந்து கிடந்த செல்லத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.