பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் பேருந்து மோதி உயிரிழந்தது கல்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணு விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் சுஜாதா. இவருடைய மகன் ஷ்ரவன். அணுசக்தி மத்திய பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இன்று சுதந்திர தின விழாவிற்காக பள்ளி சென்று விட்டு பின்னர் சைக்கிளில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையிலிருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஷ்ரவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கூடினர். அரசு விரைவு பேருந்து அதிவேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக விபத்தை பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். வேகத்தடை இல்லாத காரணத்தினாலேயே இதுபோன்ற விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய மாணவன் பேருந்து மோதி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.