கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் (08.06.2021) முதல் புதுவையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் மது அருந்துவோர் புதுவைக்கு படையெடுத்துவருகின்றனர். மேலும், பலர் புதுவையிலிருந்து மதுபானங்களை இருசக்கர வாகனங்கள், கார் போன்றவற்றில் சட்ட விரோதமாக கொண்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து, கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி நேற்று சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்ததில், விலையுயர்ந்த மது பாட்டில்கள் நெய்வேலி பகுதிக்கு கார் ஓட்டுநர் புகழேந்தி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து மதுபானங்களையும் காரையும் பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதேபோன்று இருசக்கர வாகனத்தில் புதுவையிலிருந்து சிதம்பரத்திற்கு மதுபானம் கடத்திய புவனகிரியைச் சேர்ந்த தமிழரசன், தயாளன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே விருத்தாசலம், புதுக்குப்பம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மகன் சூர்யா (24), செம்பளகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர், சுந்தர் ஆகிய 3 பேரும் கர்நாடகா மாநிலத்திலிருந்து திருட்டுத்தனமாக கொண்டுவரப்பட்ட மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தனர். அவர்களைப் போலீசார் பிடிக்க முயற்சித்தபோது சுந்தர், சுரேந்தர் இருவரும் தப்பித்து தலைமறைவாகிவிட்டனர். சூர்யாவை மட்டும் கைது செய்து, அவரிடம் இருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடகா மது பாட்டில்கள் (பவுச் பாக்கெட்டுகள்) மற்றும் இரண்டு பைக்குகளைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடிய சுரேந்தர் மற்றும் சுந்தரை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதேபோல் ராமநத்தம் போலீசார் மேலக்கல்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், வெள்ளை நிற சாக்குப்பையில் சாராயம் கடத்திவந்தது தெரியவந்தது. அதையடுத்து சாராயம் கடத்திவந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, கள்ளபுதூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் அஜித்குமார் (24), பெருமாத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதேபோல் கொரக்கவாடி பகுதியில் இரண்டு சிறுவர்கள் பைக்கில் சாராயம் கடத்தியதை அடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 100 பாக்கெட் சாராயம் மற்றும் 2 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.