தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் (TANTEA) தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனியார் தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும். அதோடு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு ஏழாவது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலை முதலமைச்சரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை, நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.