Skip to main content

மூவலூர் ராமாமிர்தம் திருமண திட்டம்; அரசுக்கு புதிய கோரிக்கை வைக்கும் மக்கள்

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Moolaloor Ramamurthy wedding plan; People making new demands on the state

 

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததால் தான் திமுக அரசு மாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

 

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் துவங்கப்பட்டபோது ஏழை பெண்களின் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக உயா்ந்து இன்று திருமண உதவி தொகையாக 50 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக நிறுத்தவில்லை. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே இந்த திட்டத்தை சற்று மாற்றி அமைத்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று  உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வருடத்திற்கு சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன் அடைவார்கள் என்று கூறியிருந்தார். 

 

தற்போது அந்த திட்டத்தில் பயன்பெறும் வகையில் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் தங்களுக்கு உதவித்தொகையும், தங்கமும் கிடைக்காமல் போய்விடுமோ என்று சந்தேகத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டம் பொறுத்தவரையில், கடந்த 2019-2020 ஆண்டில் 2051 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கடந்த 2018-2019ஆம் ஆண்டில் கொடுக்க முடியாதவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டில் சேர்த்து 4143 பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. அதிலும் 2445 பேருக்கு நிலுவையில் இருந்தது. அதேபோல் கடந்த 2020-2021 ஆண்டில் புதிதாக 1233 மனுக்கள் பெறப்பட்டன. ஆனால் 1615 பயனாளிகளுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. அதிலும் மீதம் 1248 பேர் நிலுவையில் இருந்தனர். நடப்பு 2021-2022 ஆண்டில் பெறப்பட்ட மனுக்கள் மொத்தம் 3878, பயனடைந்தவர்கள் 1632 பேர் மட்டுமே, 3494 பேர் நிலுவையில் உள்ளனர். தற்போது நிலுவையில் உள்ளவர்களுக்கு திருமண உதவி தொகை வழங்கப்படுமா? கிடைக்குமா? என்று சந்தேகத்தில் உள்ளனர். மேலும், அரசு தற்போது நிலுவையில் உள்ள இந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றனர்.  

 


 

சார்ந்த செய்திகள்