வட்டி இல்லா கடன் என்ற பெயரில் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக திருவாரூரில் பெண் ஒருவர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் நகைகளை பெற்றுக் கொண்டு வட்டி இல்லாமல் பணம் தருவதாக தெரிவித்தார். நானும் வங்கியில் அடகு வைத்திருந்த 13 பவுன் வகையை மீட்டு அவரிடம் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். கடனுக்கான பாதி தொகையை கொடுத்துவிட்டு நகையை கேட்டபோது அவர் தர மறுத்தார். தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டலும் விட்டு வருகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண் இதேபோல ஏராளமானவர்களிடம் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார். எனவே உரிய விசாரணை செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.