கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பெரிய தெருவில் உள்ள கான்கிரீட் மாடி வீடு ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இடிந்து விழும் வீட்டின் ஓரத்தின் ஒரு பகுதியில் முதலில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விரிசல் தொடர்ந்து ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது நெல்லையில் வெள்ள நீரில் சடலம் ஒன்று அடித்து வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நபரின் உடல் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த முதியவர் அந்த பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.