குடும்பத்தின் வறுமையை போக்கலாம் என எதிர்பார்ப்புடன் அதிக வருவாய் கிடைக்கிறது என்ற ஆர்வத்தாலும் ஆசையாலும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பலர் அங்கு சென்ற பிறகு மொத்தமாக ஏமாற்றப்பட்டு வெளிநாட்டு தெருவில் நின்று கண்ணீரும் கதறலுடன் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதும், அங்கேயே ஒரு சிலர் ஏதோவொரு காரணத்தினால் இறந்து போவதும் உண்டு. அப்படி இறந்தவரின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அக் குடும்பங்கள் பரிதவிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது. அப்படித்தான் இந்த அப்பாவிப் பெண்னும் கதறினார்.
ஈரோடு அருகே உள்ள நாத.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில் என்கிற குருசாமி இவரது மனைவி தீபா. பத்து வயது, பனிரெண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. குருசாமி போர் போடும் ரிக் வண்டி ஆபரேட்டர். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அப்போதுதான் வெளிநாடு சென்றால் கைநிறைய மாத மாதம் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் என்று தனக்கு தெரிந்தவர்கள் கூற சென்னை சூளைமேடு ஸ்ரீராம் மதுரை ராஜேந்திரன் ஆகியோர் தங்களது ரிக் வண்டி ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பி என்ற நாட்டில் போர் போட சென்றுள்ளதாகவும், அங்கு சென்றால் மாதம் 1 லட்சம் சம்பளம் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். அதைநம்பி சென்ற நவம்பர் மாதம் மொசாம்பி நாட்டுக்கு ரிக் வண்டி ஆபரேட்டர் வேலைக்கு போயுள்ளார் குருசாமி.
அடுத்த மாதம் 50 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பிய குருசாமி அதன் பிறகு தனது முதலாளி பணம் கொடுக்க மறுக்கிறார் என தனது மனைவி தீபாவிடம் போனில் கூறியிருக்கிறார். இவர்களது குடும்பமே ரிக் வண்டி முதலாளிகளிடம் கண்ணீருடன் பேச அதன் பிறகு சொற்ப தொகை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள். அதன் பிறகு குருசாமி நான் எனது சொந்த ஊருக்கே போகிறேன் எனது சம்பளத்தை கொடுங்கள் செல்கிறேன் என கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. இந்த நிலையில் திடீரென குருசாமி இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு போன் மூலம் தகவல் கூறியிருக்கிறார்கள்.
எனது கணவர் எப்படி இறந்தார்? இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நான் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என என்னிடம் கூறினார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் இறந்த எனது கணவர் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சக்தி கணேசனிடம் மனு கொடுத்து குருசாமி மனைவி தீபா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் முறையிட்டனர்.
இதன் பிறகு மாவட்ட எஸ்.பி. சந்திகணேசன் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விமானம் மூலம் குருசாமி உடல் கொண்டு வரப்பட்டு 24. 9.19 செவ்வாய்கிழமை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தது. இதற்கிடையே அங்கு குருசாமி உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார் முத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு.இதனையடுத்து மறு பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்திரவிட்டது. அதன் அடிப்படையில் மறு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குருசாமி உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
குடும்பத்தின் வறுமையையும், கஷ்டத்தையும் முழுமையாக போக்கலாம் என ஆசைப்பட்டு வெளிநாடு போன குருசாமி உயிரற்ற உடலாக வந்து விட்டார். அந்த அப்பாவி குடும்பத்திற்கு நிரந்தர கஷ்டதுழ்ந்து விட்டது. இந்த குடும்பத்தின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என சமூக செயல்பாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.