அரியலூர் மாவட்டம் மேல ராமநல்லூர் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று மதியம் 12 மணி அளவில் மதனத்தூர் நீலத்தநல்லூர் பாலத்தின் வழியே சென்றது. அதனை அப்பகுதில் இருந்த பொதுமக்களும் போலீசாரும் பார்த்து தஞ்சை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டிருந்தால் சடலத்தை கண்ட உடனேயே அந்த உடலை மீட்டிருக்கலாம். ஆனால் அந்த உடல் அங்கிருந்து சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து 14 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தது.
இதற்கிடையே அங்கிருந்த மீட்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதாக கூறி கரையோரங்களில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் தஞ்சை மாவட்டம் வாண்டையார் இருப்பு நீரேற்று நிலையம் அருகே வந்தது. அதனை அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் பெண்ணின் உடல் வருகிறது என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த மீட்புப்படையினர் ஆற்றில் இறங்க தயங்கினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தைரியமாக நடு ஆற்றில் சென்று உடலை மீட்க முயற்சி செய்தார் ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அணைக்கரை பாலம் அருகே சென்று கொண்டு இருந்த உடலை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கார்த்திக் என்ற இளைஞர் தைரியமாக நடு ஆற்றிற்கு நீச்சல் அடித்து சென்று அந்த உடலை பிடித்தார்.
பெண்ணின் உடலுடன் நடு ஆற்றில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யதார். இதனை தஞ்சை மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் வேடிக்கை பார்த்தனர்.
அந்த இளைஞன் பாலம் நெருங்குகிறது விரைவில் வாருங்கள் என்று கை அசைத்ததை தொடர்ந்து மீட்பு படையினர் சில குதித்து அவருக்கு உதவி செய்து சடலத்தை ஒரு முட்புதர் பகுதியில் எடுத்து வந்தனர்.
தமிழகம் முழுவதும் எதிரொலித்த இந்த விபத்தை எப்படி கையாள வேண்டும் உடலை எப்படி மீட்க வேண்டும் என்று கூட தெரியாமல் அங்கிருந்த அதிகாரிகள் கரை பகுதியில் இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்தது விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மாவட்ட அதிகாரிகள் முழுமையாக அங்கு இருந்தும் 5 மணி நேரம் ஒரு பெண்ணின் உடலை மீட்க முடியாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்த்த நிலையில் இளைஞர் ஒருவர் ஆற்றில் நீண்ட நேரம் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தது அங்கே பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களிடையே பாராட்டத்தக்க வகையில் இருந்தது.
எந்த ஒரு அதிகாரியும் எந்த உத்தரவும்பிறப்பிக்கவில்லை. ஆனால் அனைத்து அதிகாரிகளும் அங்கேதான் இருந்தனர். பெண்ணின் உடலை மீட்ட கார்த்திக் என்ற வாலிபரை அரசு பாராட்ட வேண்டும். அவருக்கு காவல்துறை அல்லது தீயணைப்பு துறையில் பணி வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இது போன்று திறமை, துணிவு உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் என்றனர் பொதுமக்கள்.