Skip to main content

சிலைக் கடத்தல் வழக்குகளின் கேஸ் டைரி மாயமான வழக்கு! -டி.ஜி.பி. அறிக்கை அளித்திட அவகாசம்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

Madras High Court


சிலைக் கடத்தல் தொடர்பான  41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமானது தொடர்பான வழக்கில், டி.ஜி.பி. அறிக்கை அளிக்க மேலும் நான்கு வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில்:-
 


தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த வகையில், சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களைக் (கேஸ் டைரி) காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.  அதனால்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர். 

பொதுவாக மிகமுக்கிய நபர்கள் தொடர்புள்ள சிலைக் கடத்தல் வழக்குகளை இப்படித்தான் போலீசார் முடித்து வைக்கின்றனர். உயர் அதிகாரிகளுடன், விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, சிலைக் கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே, இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழக டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 
 

 


இந்த வழக்கு, ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது இது குறித்து தமிழக டி.ஜி.பி. அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி, இதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட  உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே,  மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
 

http://onelink.to/nknapp


இதையடுத்து,  வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்