Skip to main content

உழவர் நிதியுதவி திட்டத்தில் நிலமற்ற வடமாநிலத்தவர்கள் சேர்ந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Kissan scheme issue northindians are members

 

பிரதமரின் உழவர் நிதியுதவி திட்டத்தில் (கிசான் சம்மான் நிதி யோஜனா) போலி உறுப்பினர்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது. சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, பெரம்பலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெயரில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இரண்டு தவணையாக தலா 2,000 ரூபாய் வீதம் பெற்று மோசடி நடந்துள்ளது.


புகார் எழுந்த மாவட்டங்களில் உள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் 18 ஆயிரம் பேர் போலி பயனாளிகளாகச் சேர்ந்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள் பலர் இதன் பின்னணியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம், இம்மாவட்டத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்த மோசடி தொடர்பாக, உதவி வட்டார அலுவலர் அன்பழகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, இதுவரை முறைகேடாக உதவித்தொகை பெற்ற, போலி பயனாளிகளிடம் இருந்து பணத்தை மீட்கும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம், 3.15 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல மொத்தம் 72 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 


இதில் வேடிக்கை என்னவென்றால், உழவர் நிதியுதவி திட்டத்தில் தமிழகத்திற்கு வேலை தேடி வந்த வடமாநிலத்தவர்கள் பலரும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பதுதான். அந்த வகையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள், தமிழக விவசாயிகள் என்ற பெயரில் போலி பயனாளிகளாகச் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இதுவரை தலா 2,000 ரூபாய் வீதம், இரண்டு தவணைகளில் 4,000 ரூபாய் பெற்றுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் மட்டும், வட மாநிலங்களைச் சேர்ந்த 1,234 பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உழவர் நிதியுதவி திட்டத்தில் சேர்வதற்கு அந்தந்த மாநிலத்தில் 5 ஏக்கர் வரையிலான விவசாய நிலம் இருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாகும். 


ஆனால், தமிழ்நாட்டில் சொந்தமாக விவசாய நிலமே இல்லாத வடமாநிலத்தவர்கள் பலரும் இத்திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் தனியார் இ-சேவை மையங்கள் மூலம் வடமாநிலத்தவர்கள் பலரும் உழவர் நிதியுதவி திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். போலிப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க ஒவ்வொருவரிடம் இருந்தும் 2,000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

 

Ad


பயனாளிகளின் விவரங்களை நேரில் சரிபார்த்திருக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் வசூலில் கவனம் செலுத்தியதால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால்தான், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி தரப்பில் கேட்டபோது, ''தமிழ்நாட்டில் விவசாய நிலமே இல்லாத வடமாநிலத்தினர் பலர் சிறு, குறு விவசாயிகள் பெயரில் உழவர் நிதியுதவி திட்டத்தில், போலிப் பயனாளிகளாகச் சேர்ந்துள்ளனர். இதில், அரசுத்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. அதுபற்றியும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்