உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலருடன் 'நெருக்கமாக' பழகியதை கண்டித்த கணவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காரிமங்கலம் அரசுப்பள்ளி ஆசிரியை உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொட்டலூரைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (46). விவசாயி. இவருடைய மனைவி பிரியா (41). காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஆசிரியை பிரியாவுக்கு உடன் பணியாற்றி வரும் சில ஆசிரியர்களுடன் 'நெருங்கி பழகி' வந்தார். மேலும், காரிமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடனும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதையறிந்த பொன்னுரங்கம், மனைவியைக் கண்டித்துள்ளார்.
(படம்: சக்திவேல், அருண்குமார்)
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இனிமேல் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று பொன்னுரங்கம் தடை விதித்துள்ளார். அல்லது, வேறு ஊருக்கு இடமாறுதல் பெற்றுச் சென்று விடு என்றும் வற்புறுத்தி உள்ளார். நாளுக்கு நாள் அவர் குடைச்சல் கொடுத்து வந்ததால், ஒருகட்டத்தில் பொன்னுரங்கத்தைத் தீர்த்துக் கட்டிவிட்டால் எல்லா பிரச்னைகளும் ஒழிந்து விடும் என்ற முடிவுக்கு வந்தார் பிரியா.
கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்பு, பொன்னுரங்கம் பெரியாம்பட்டி அருகே சென்றபோது, அவர் மீது கூலிப்படையினரை வைத்து காரை மோதச் செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவத்தில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
முதல் முயற்சியில் தோல்வி அடைந்த பிரியா, கடந்த சில நாள்களுக்கு முன்பு, பொன்னுரங்கத்திற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை வீட்டில் வைத்தே கொலை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த திட்டமும் தோல்வியில் முடிந்ததுடன், தன்னை மனைவியே கொல்ல முயற்சிக்கிறார் என்பதை அறிந்த பொன்னுரங்கம், இதுகுறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் ஆசிரியை பிரியாவிடம் விசாரணை நடத்தினர். மற்ற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவதும், சகஜமாக பேசி சிரிப்பதும் கணவருக்குப் பிடிக்காததால், அவரை கொன்றுவிட தீர்மானித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கொலை முயற்சி குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக பிரியாவின் காரிமங்கலம் மலைக்கோயில் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் சக்திவேல் (23), மோகன் மகன் அருண் குமார் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், ஆசிரியை பிரியாவுக்கு யார் யாருடன் நெருக்கமான தொடர்பு இருந்ததோ அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆண் நண்பர்களுடனான தவறான தொடர்பால் பெண் ஆசிரியர் ஒருவரே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பள்ளிக்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.