கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையில் விற்பனையாளர்களாக ஆனந்தன், ஜெகநாதன், ஆகியோர் உள்ளனர். அந்த டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் வழக்கம்போல மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. அப்போது முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில்(32) அந்த டாஸ்மாக் கடைக்குச் சென்று 150 ரூபாய் விலை கொண்ட மது பாட்டில் ஒன்றை வாங்கி கடைக்கு முன்பாகவே பாட்டிலைத் திறந்து குடித்துள்ளார்.
குடித்த சிறிது நேரத்தில் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதைப் பார்த்த அவரை சுற்றிலும் இருந்த மது அருந்துவோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் குடிப்பதை நிறுத்திவிட்டு விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘சரக்கில் கலப்படம் இருக்கிறது அதனால்தான் அதைக் குடித்த செந்தில் மூக்கிலிருந்து ரத்தம் வழிகிறது’ என்று தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த போலீஸார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்தார்.
அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். மூக்கில் ரத்தம் வழிந்த செந்திலை உடனடியாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் டாஸ்மாக் கடை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் உடல்நிலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.