கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் கொள்முதல் செய்யும் போது, உள்ளூரில் சில்லரை விற்பனை செய்ய அரசு தடை செய்திருப்பதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முற்றுகையிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த 48 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. கீரமங்கலத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் உள்ளூரில் வீடுகள், கடைகளுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பாலை ஆவின் கொள்முதலுக்கு அனுப்புகின்றனர். கீரமங்கத்தில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 70% வரை உள்ளூரில் விற்பனையாகிறது.
ஆனால், கடந்த டிசம்பர் முதல் தேதியிலிருந்து கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டுமே உள்ளூரில் விற்பனை செய்ய வேண்டும் மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் கூட்டுறவு சங்க செயலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளூர் பால் விற்பனையை நிறுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ளூர் விற்பனையை நிறுத்தியதால் பால் வாங்க காத்திருந்த பொதுமக்கள், தேநீர் கடைக்காரர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் புதுக்கோட்டை ஆவின் எஸ்.ஒ திருப்பதி, மற்றும் கீரமங்கலம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வீடுகளுக்கு பால் விற்பனை செய்யலாம் என்றனர். ஆனால், கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆவினில் மாதாந்திர அட்டை போட்டு பாக்கெட் பால் வாங்கிக்கொள்ளட்டும் என்றனர் அதிகாரிகள்.
ஆனால், எங்கள் ஊரில் பாக்கெட் பாலில் டீக்கடை விற்பனை செய்ய முடியாது. எங்கள் ஊரில் உற்பத்தியாகும் பால் எங்களுக்கு வேண்டும் என்று அதிகாரியை முற்றுகையிட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்த பிறகு சில்லரை விற்பனை செய்யப்பட்டது. இனிமேலும் உள்ளூர் விற்பனை செய்வதை நிறுத்தினால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இன்று பால் விற்பனை செய்யாததால் கீரமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டிருந்தது.