நெல்லை டவுனின் பாரதியார் தெருவிலிருக்கிறது அந்த தனியார் மெட்ரிக் பள்ளி. ஆரம்ப வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை இந்த மெட்ரிக் பள்ளியில் அதிக அளவில் மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் 13 பேர்களுக்கிடையே ஈகோ விவகாரம் காரணமாக நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற கெத்தில் வாய்த் தகராறு முற்றி அவர்களுக்குள சண்டையிடும் வரை போயிருக்கிறது. இதனால் பள்ளிச் சாலை பரபரப்பானது. தகவல், அருகிலுள்ள டவுண் காவல் நிலையத்திற்குப் பறக்க, வேறு ஏதேனும் நடந்து விடக் கூடாது என்ற அரிபுரியில், ஸ்பாட்டுக்கு இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, உதவி ஆய்வாளர் மகாலட்சுமி, மற்றும் காவலருடன் வந்திருக்கிறார்.
அந்தப் பகுதியில் சண்டையிட்ட மாணவர்கள் 13 பேரையும் வளைத்துப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தவர், மறு நாள் காலை 13 மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் காவல் நிலையத்தில் ஆஐராகி 1330 திருக்குறளையும் மாணவர்கள் எழுத வேண்டும் என்ற நிபந்தனையில் அனுப்பியுள்ளார் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி.
நிபந்தனைப்படி இன்று காலை 10 மணியளவில் தங்கள் பெற்றோருடன் டவுன் காவல் நிலையம் வந்த மாணவர்கள் தண்டனையாக 1330 திருக்குறளையும் அமைதியான மனதுடன், ஒற்றுமையாக அமர்ந்து எழுத ஆரம்பித்தவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
காக்கி உடைகள் அணிந்தவர்கள் என்றாலும் அவர்கள் நெஞ்சிலும் ஈரம், இரக்கம், கசிவதையறிந்த பெற்றோர்கள் நடந்த தவறுக்காக மாணவர்களை மன்னிக்கும்படி இன்ஸ்பெக்ரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
வெளி உலகம் அறியாத மனது தவறை உணரவேண்டும். அதே சமயம், அவர்கள் திருவள்ளுவரின் திருக்குறளையும் அறிய வேண்டும் திருந்த வேண்டுமென்ற கல்வி நோக்கத்துடன் எழுதச் சொல்லப்பட்டது. சூழ் நிலையப் பொறுத்து மாணவர்களை மென்மையாக நடத்தினால் விவகாரத்திற்கு வாய்ப்பில்லை என்கிறார் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி.
தேசப் பிதா மகாத்மா காந்தியின் அகிம்சை வழி, கல்மனதையும் கரைக்கும் என்பது உணர்த்தப்பட்டதுடன் மாணவர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது.