திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சத்யா காலனி பகுதியில் குடியிருந்து வந்த இவருக்கும் தீபக் என்ற இளைஞருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் நட்பு மலர்ந்துள்ளது. தொடர்ந்து பல நாட்களாக இருவரும் பழகி வந்த நிலையில், திருப்பூரில் உள்ள நந்தினியின் வீட்டிற்கு தீபக் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இன்று நந்தினி வீட்டிற்கு தீபக் வந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தீபக் நந்தினியிடம் தன்னுடைய காதலை தெரிவித்து வந்த நிலையில் நந்தினி அதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில். இன்றும் தீபக் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதை நந்தினி ஏற்க மறுத்த நிலையில் தீபக் தான் கையில் கொண்டு வந்த பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து நந்தினி சரமாரியாக மூன்று இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடலையும் திருப்பூர் வடக்கு போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒருதலை காதல் விவகாரத்தில் இளைஞர் ஒரு பெண்ணை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.