!['Blar' for students; Bus driver fired!](http://image.nakkheeran.in/cdn/farfuture/kJbuHNNA4YvH3c-BRVwn3ImOsUk732kKLfWGbp-AepU/1651200027/sites/default/files/inline-images/bus434333.jpg)
சேலத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசியதோடு, கன்னத்தில் அறைந்த நடத்துநரை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை (ஏப். 27) மாலை 05.00 மணிக்கு அந்தப் பேருந்து சாரதா கல்லூரிச் சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளி மாணவிகள் பேருந்தில் ஏறியுள்ளனர்.
மாணவிகள் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்ததால், அவர்களை உள்ளே போகுமாறு பேருந்து நடத்துநர் கூறியுள்ளார். இந்நிலையில், பேருந்து அஸ்தம்பட்டி காவல்நிலையம் அருகில் சென்றதும் பேருந்தில் இருந்து இறங்கிய பிளஸ்2 மாணவி ஒருவர், தனது தோழிகள் இருவரை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்றார்.
பேருந்தில் ஏறியபோது, நடத்துநர் உள்ளே போகுமாறு சத்தம்போட்டு சொன்னதுடன், என்னை தொட்டு உள்ளே தள்ளி விட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் கெட்ட வார்த்தையால் பேசி கன்னத்தில் அடித்து விட்டார். இதனை தட்டிக்கேட்ட தோழிகள் இருவரையும் கெட்ட வார்த்தையால் திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சம்பவ இடம் அழகாபுரம் காவல் சரகம் என்பதால், அஸ்தம்பட்டி காவல்துறையினர் மாணவிகளை அழகாபுரம் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகள் அளித்த புகாரின்பேரில், முதல்கட்டமாக சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் காந்திமதி விசாரணை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, நடத்துநர் மீது வந்த புகார் குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், புகாரில் குறிப்பிட்ட பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றியவர் பெயர் மகாலிங்கம் என்பதும், அவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.