திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் ஆட்சேபனைகள் / கருத்துருக்களை நேரடியாகக் கேட்பதற்கான மண்டல அளவிலான கூட்டம் நேற்று (21.12.2021) நடைபெற்றது. இதில் மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது.
வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் வெளியிடப்பட்டு, அக்கருத்துருக்களின் மீது அரசியல் கட்சிகள் / பொது மக்களின் ஆட்சேபனைகள் / கருத்துருக்கள் தொடர்பான மனுக்கள் அளித்திட தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் / பொது மக்கள் கலந்துகொண்டு ஆட்சேபனைகள் / கருத்துருக்களை நேரடியாக தெரிவித்தனர்.
அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு மறுவரையறை ஆணையத் தலைவரான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவரிடம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 1 மனுவும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 மனுவும் என 2 மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு 24.12.2021-க்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் - செயலர் ஏ. சுந்தரவல்லி இ.ஆ.ப., மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் நகராட்சி நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மறுவரையறை அலுவலர்கள் சு. சிவராசு இ.ஆ.ப., (திருச்சிராப்பள்ளி), தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., (தஞ்சாவூர்), டாக்டர். த. பிரபுசங்கர் இ.ஆ.ப., (கரூர்), முதன்மைத் தேர்தல் அலுவலர்கள் கே.அ. சுப்ரமணியம் (ஊராட்சிகள்), ஜி. தனலெட்சுமி (நகராட்சிகள்) ஆகியோர் உட்பட தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.