நாகையில் பாஜக- திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி பாஜகவினர் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதோடு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் நீண்டகாலமாக இருந்துள்ளார். நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் விஜயேந்திரனுக்கு பாஜகவில் மாவட்ட அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக விஜயேந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிக சத்தமுள்ள வெடி என்பதால், அதிர்வில் அருகிலிருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி என்பவரது மளிகை கடையில் உள்ள கண்ணாடி உடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி ஆதரவாளர்களுக்கும், விஜியேந்திரன் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலில் ஞானமணியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக போலீசார் இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் திமுக தரப்பில் 7 பேர் மீதும் பாஜக சார்பில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி பாஜக சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் 23 ம் தேதி மாலை நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.