அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு; கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி, தி.மு.க., காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாவளவனுக்கு ஏற்கனவே நான் பதிலளித்துவிட்டேன். திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்க்காதவர்கள், மக்களிடம் எப்படி கொண்டு செல்வார்கள்? தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் வீட்டுப் பெண்கள் கோவில் கோவிலாக செல்கின்றனர்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் இஸ்லாமியப் பெண்களின் பிரச்சனையாக இருந்த முத்தலாக் முடிவுக்கு வந்தது. நீட் விவகாரத்தில் 7.5% உள் இடஒதுக்கீடு குறித்த மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு நேரம் கொடுப்பதில் தவறில்லை. தந்தை பெரியார் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்." இவ்வாறு குஷ்பு பேசினார்.