தேசிய கீதம் இசைத்து கொண்டிருந்தபொழுது பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அவர் அவையில் இருந்து வெளியேறினார். அங்கிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரிடம் கைகுலுக்கிய பின் அங்கிருந்து சென்றார்.
எடியூரப்பா பதவி விலகலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ’’எதிர்க்கட்சிகள் இணைந்து பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்தியுள்ளன என்பதனை கண்டு வியக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு குதிரை பேரத்தினை ஊக்குவித்தது.
பாரதீய ஜனதா கட்சியினரால் எந்தவொரு அமைப்பினையும் அவமரியாதை செய்ய முடியும். அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்கவில்லை என கூறினார்.