
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் அவரது கட்சியினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். திமுக தலைமை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீண்ட ஆயுளோடும், உடல் நலத்தோடும் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்' என மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 'சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்' என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், விஜய், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, பாஜக தமிழக தலைவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.