கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரவுடி சூர்யா என்பவர் பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். பின்னர் அவர் பட்டாக்கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் சென்ற பிரகாஷ் என்பவர் மீது கத்திபட்டு படுகாயம் அடைந்தார். ரவுடி சூர்யாவை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓடினார். அப்போது கீழே விழுந்த சூர்யாவிற்கு கை மற்றும் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. ரவுடி சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி தேதி இரவு ரவுடி சூர்யா போலீசார் காவலில் இருந்தபோது தனது மனைவியுடன் மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மனைவி மற்றும் நண்பர்களுடன் அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதுடன் தனது மனைவிக்கும் கேக் ஊட்டி விட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய முதுநிலை காவலர் சாந்தகுமார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வேல்முருகன், கவியரசன் ஆகிய 3 பேரையும் பணியிட நீக்கம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி சூர்யாவை சென்னை மருத்துவமனைக்கு மத்திய சிறை நிர்வாகம் மாற்றியுள்ளது.