தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான போலி தகவல்களைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ''வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 லட்சத்திற்கும் அதிகமான வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர். பீகாரிலிருந்து ஒரு குழு தமிழகம் வந்திருந்தது. உள்ளாட்சித் துறையின் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நான்கு அதிகாரிகள் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
பின்னர் அக்குழு திருப்பூருக்கு சென்று மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசி வெளிமாநிலத் தொழிலாளர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு எல்லாம் சென்று பார்வையிட்டனர். பிறகு அவர்களிடம், ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நன்றாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என வடமாநிலத் தொழிலாளர்கள் சொன்னார்கள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த குழு, ‘தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது, தொழிலாளர்கள் நன்றாக இருக்கிறார்கள் இந்த செய்தி கேள்விப்பட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்'' என்றார்.