தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (22/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 13 கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து, தவறாகப் பயன்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை எதிர்த்து, தமிழக மக்களை மட்டும் நம்பி, தன்னம்பிக்கையுடன், தனியே போட்டியிட்டு, பாரதிய ஜனதா கட்சி, தன் தனித்துவத்தை நிரூபித்து விட்டது.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்து நபருக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்த்த, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்கள் தந்த மனப்பூர்வமான அங்கீகாரம் இந்த மகத்தான வெற்றி.
முதலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அமோக வெற்றிகளை தேடித்தந்த தமிழக மக்களின் பொற்பாதங்களை வணங்கி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றியை பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
ஆளும் கட்சியின் அத்துமீறல், பணபலம், படைபலம், கள்ள ஓட்டு, என்ற எல்லா வகையான அராஜகத்தைத் தாண்டியும், மாநகராட்சிகளில் 22- க்கும் மேற்பட்ட இடங்கள், நகராட்சிகளில் 56- க்கும் மேற்பட்ட இடங்கள், பேரூராட்சிகளில் 230- க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பா.ஜ.க.வுக்கு கிடைத்த இடங்களும், இதுவரை இல்லாத மிக அதிகமான வாக்கு சதவீதமும், பா.ஜ.க.விற்கு மக்கள் தந்த அங்கீகாரம். பா.ஜ.க. தொண்டர்களை நம்பி, தமிழக மக்களை நம்பி, தனியே போட்டியிடலாம் என்ற சிறந்த முடிவினை, பா.ஜ.க. தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவிற்கு, மக்கள் தந்த பரிசு இந்த வெற்றி.
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று, எள்ளி நகையாடிய எதிர்க்கட்சிகளின் கண்முன்னே திருப்பூர் குண்டடம் 9- வது வார்டில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முன்வெறும் 30 ஓட்டுக்கள் வாங்கி தி.மு.க. டெபாசிட் இழந்ததுள்ளது. அது மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பரவலாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று, சென்னை, நாகர்கோவில், தஞ்சாவூர், கடலூர், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர், ஓசூர் என்று 11 மாநகராட்சிகளில் வெற்றிக் கணக்கை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. இது தவிர மற்ற பல இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பா.ஜ.க. பெற்றது. அதிலும் சிறப்பாக, இதுவரை வெற்றி பெறாத பல இடங்களில் பா.ஜ.க. தன் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, இதற்கு முன் கேள்விப்படாத அளவிற்கு, ஆளும் கட்சியால் பல கோடிகளை வாரி இறைத்து நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் இந்தத் தேர்தல். வாக்குக்குப் பணம், வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், என்று ஒரு வாக்குக்கு பல ஆயிரக்கணக்கில் செய்யப்பட்ட செலவுகள் பல கோடிகளைத் தாண்டும்.
ஜனநாயகத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு விலை வைத்து, வாக்குகளுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து, கள்ள ஓட்டுக்கள் போட்டு, வாக்குப் பெட்டிகளை கைப்பற்றி, ஆளும் கட்சி செய்த அத்தனை அராஜகத்தையும் மீறி பணநாயகத்தை தோற்கடித்து, தமிழகத்தில் தாமரை மலர்ந்து இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சியில், தன் வெற்றி கணக்கை தொடங்கி விட்டது. பா.ஜ.க. தமிழகத்தில் எப்போதோ வேரூன்றி விட்டது. இப்போது முழுமையாக மலர்ந்து விட்டது. ஆளும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க கூட்டணி இவர்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது.
பாரதப் பிரதமரின் ஊழலற்ற உன்னதமான ஆட்சிக்கு தமிழகமக்கள் கொடுத்த அன்புப்பரிசாக, இந்த வெற்றியைப் பார்க்கிறோம். பா.ஜ.க.வை ஒரு தவிர்க்க முடியாத மாற்று சக்தியாக தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது. தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதற்கு இந்த வெற்றி கட்டியம் கூறுகிறது. தமிழக மக்கள் ஆலம் எடுத்து பா.ஜ.க.வை வரவேற்று, தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள்.
பா.ஜ.க.வை அங்கீகரித்து, தமிழக மக்கள் தந்த இந்த வெற்றியை தலைவணங்கி நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனைத்து பாரதிய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், களத்தில் நின்ற வேட்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2024-ஆம் ஆண்டு தேர்தல் களத்திற்கு பாஜக தயார்". இவ்வாறு பா.ஜ.க.வின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.