தென்காசி மாவட்டத்தின் சேர்ந்தமரம் காவல் சரகத்திற்குட்பட்ட ஐந்து கிராமங்களில் அரசு டாஸ்மாக் மற்றும் தனியாரின் லைசென்ஸ் பெற்ற பார்களும் செயல்படுகின்றன. ஓரளவுக்கு வளர்ச்சி என்பதால் சரகத்தில் வருகிற கிராமங்களின் டாஸ்மாக், பார் விற்பனைகள் அமர்க்களப்படுவதுண்டு. கொழிக்கும் வருமானம் என்பதால் காவல் லிமிட்டிற்குப் போகவேண்டிய மாதப் பதிவுகள் ரெகுலராக போய்விடுவதுண்டாம்.
அக். 2ம் காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்படக்கூடாது. கண்டிப்பாக அடைக்கப்பட வேண்டும் என்ற விதியும், அரசின் கட்டளையும் உண்டு. போக வேண்டிய இடத்திற்குத்தான் மார்ஜின் போய்விடுவதால் அந்த கெத்தில் சேர்ந்தமரம் காவல் எல்லையில் பார்களும் அன்றைய தினம் செயல்பட்டிருக்கின்றன. நான்கு பார்களின் அன்றைய ஸ்பெஷல் கவனிப்பு போய்விட்ட நிலையில் சரகத்திற்குட்பட்ட கள்ளம்புளி கிராமத்தின் பார் மட்டும் ஸ்பெஷல் கிஸ்தியைச் செலுத்தாமல் பார் விறுவிறுப்பாக ஓடியிருக்கிறது. இதனை நோட்டமிட்ட சேர்ந்தமரம் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட ஸ்பெஷல் போலீஸ் டீம் மஃப்டியில் அந்தப் பாருக்குச் சென்றவர்கள், ''அக்-02 காந்தி ஜெயந்தி ஞாபகம் இல்லையா. அடைக்கலையா'' என பார் நடத்துகிற புள்ளியிடம் அதட்டி இருக்கிறார்கள்.
''மாசா மாசம் தான் பார் பதிவு போய்டுதில்லோ. பின்ன என்ன இப்போ. இன்னைக்கு என்ன ஸ்பெஷல் கவனிப்பா'' என பார் புள்ளிகள் கெத்தாகக் கேட்டிருக்கிறார்கள். இதனால் சுரீரென்று விசனப்பட்ட காவலர்கள் அவர்களை விரட்டி ஒதுக்கிவிட்டு அங்குள்ள கல்லாவில் இருந்த கனமான தொகையை அள்ளியவர்கள் கூடவே ஐந்து கேஸ் பெட்டி சரக்கையும் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
வந்தது காவலர்கள் எனப் பதறிய பார் லைசென்ஸ் ஓனர் இளையபாண்டியோ அள்ளிச் சென்றதைக் காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள் என்று காத்திருந்திருக்கிறார். ஆனால் நான்கு நாட்கள் கடந்தும் எந்த வித அசைவும் தென்படாமல் போகவே, போலீசார் பாரில் நடந்து கொண்டது, சரக்கு பெட்டிகளைத் தூக்கிச் சென்றது உள்ளிட்டவைகள் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிட, அதன்பிறகே அரண்டு மிரண்டு போன சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார், பார் ஓனர் இளையபாண்டி மற்றும் மூன்று காவலர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டதுடன், எடுத்துச் சென்றது 5 கேஸ் பெட்டிகளுக்குப் பதிலாக மூன்று கேஸ் பெட்டி என்று மட்டுமே எப்.ஐ.ஆரில் காட்டிவிட்டார்களாம்.
டீமாக வந்த போலீசார் மஃப்டியிலிருந்தார்கள். பார் பணியாளர்களை அடித்து வெளியே உட்கார வைத்து விட்டு பணத்தையும் எடுத்தவர்கள் இந்த வேலையைச் செய்துள்ளார்கள். அவர்கள் நடந்து கொண்டதை சி.சி.டி.வி. ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன் என்கிறார் பார் உரிமையாளரான இளையபாண்டி.
பார் பணியாளர் ஒருவரிடம் இருந்த வண்டிக்கு பைனான்ஸ் கட்ட வைத்திருந்த பணத்தையும் விடுங்கி விட்டார்கள். எப்.ஐ.ஆர் ஆனதைத் தொடர்ந்து பார் ரெய்டுக்கு சென்று விவகாரத்தை உண்டு பண்ணியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.