
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா. வயது 27. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கேசியராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ஆம் தேதி தனது பணி முடிந்து வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து தனது ஊருக்கு இருசரக்க வாகனத்தில்புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
சித்தால் கிராமத்தின் அருகில் உள்ள மாதிரி பள்ளி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தீடீரென்று பத்மாவின் கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட பத்மா அவன் கையை தட்டி விட்டதால் நிலைதடுமாறி அந்த வாலிபர் பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனே பத்மா திருடன் திருடன் என்று சத்தம் போட்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பத்மா தியாகதுருவம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், தலைமறைவான செயின் பறிக்க முயன்ற வாலிபரை தேடி வந்தனர். அப்போது வடதொரசலூர் அருகே சந்தேகப்படும் அளவில் சென்றுகொண்டிருந்த வாலிபரை மடக்க அந்த வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்கள் அந்த இளைஞரிடம் விசாரித்தபோது வங்கி கேஷியர் பத்மாவிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் 19 வயது தமிழரசன் என்பதும் இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் தற்போது கரோனாவால் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தன் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இதற்கிடையே தமிழரசன் படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். ஆனால் தமிழரசனிடம் ஸ்மார்ட்போன் இல்லை தனது பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்க பணம் கேட்டதற்கு அவர்கள் தற்போது பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எப்படியாவது ஸ்மார்ட் போன் வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவெடுத்த தமிழரசன் தடம் மாற ஆரம்பித்தார். அதற்காக வங்கி காசாளர் பத்மா மொபட்டில் வரும்போது செயின் பறிக்க முயற்சி செய்துபோது போலீசிடம் சிக்கிக் கொண்டார். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று சம்பாதித்து ஸ்மார்ட்போன் வாங்க வழிவகை இருந்தும் அவசர புத்தியின் காரணமாக திருடனாக மாறி இப்போது சிறைக்கு சென்றுள்ளார். ஒரு ஸ்மார்ட்போன் ஆசையால் அவரது வாழ்க்கையே இப்போது திசை மாறிப் போயுள்ளது. ஐயோ பாவம் என்கிறார்கள் தியாக துருவம் போலீஸார்.