திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் மருத்துவமனையில் சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால், அறையில் உள்ள அனைவரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.