கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஞாயிறன்று இரவில் கட்டிட்டத் தொழிலாளி ஒருவர் தலைத்துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட, நெல்லை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றங்கரை கருப்பந்துறையை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு முத்துமாரியை கரம் பிடித்த இவருக்கு மூன்று மாத வயதில் கைக்குழந்தை உள்ளது.
சம்பவத்தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில், சரியாக 9.40க்கு தனது நண்பர்களான கணேசன் மற்றும் சரவணனுடன் அங்குள்ள ஆற்றுப்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்த பொழுது, அவ்வழியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் மூவரையும் வெட்டித் தள்ளியுள்ளனர்.
வெட்டு வாங்கிய நிலையிலேயே மற்ற இருவரும் தப்பித்து ஒட, கால் துண்டாகி ஓட இயலாத மணிகண்டனை அனைவருமாக சேர்ந்து வெட்டித் தள்ளியதோடு மட்டுமில்லாமல், அவருடைய தலையையும் துண்டித்து கொலை செய்துள்ளனர். மணிகண்டன் கொலையானது அறிந்த அவரது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என கருப்பந்துறை - மேலநத்தத்தில் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட, கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்குள்ள மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் மறியலை கைவிட்டனர் அவர்கள்.
இவ்வேளையில், கருப்பந்துறை - விளாகம் பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்ட மாநகர காவல்துறை டவுன் உதவிக் கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க, விளாகம் பகுதியிலுள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் இப்பகுதியை கடக்கும் போது, மற்றொரு சமூகத்தை சேர்ந்த கொலையுண்ட மணிகண்டன் சாதி பெயரைக் கூறி கேலி செய்திருப்பதாகவும், சாதித் தலைவருக்கு ப்ளக்ஸ் வைத்து கிழிக்கப்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் குறிப்பிட்ட சமூகத்தினரை அடித்து உதைத்ததுமே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம்." என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தற்பொழுது பதட்டம் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.