
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஆர்.டி.ஓ அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் இறங்கியது.
வேலூர் மாநகரம் சத்துவாச்சாரியில் வேலூர் - திருவண்ணாமலை ஒன்றிய ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்துக்குள் நவம்பர் 1 ந்தேதி காலை 11 மணியளவில் புகுந்தனர். தமிழகத்தில் பால் உற்பத்தியில் இரண்டாவதாக உள்ள ஒன்றியமிது. இதற்குள் புகுந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் 14.80 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்த தொகைக்கு கணக்கு இல்லை என்பதால் அந்த பணம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு துறை ரீதியிலான விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 11 லட்சத்தை கைப்பற்றினர். ஆர்.டீ.ஓ அறிவழகனிடம் நடத்திய விசாரணையில் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் வழக்கு பதிவுச்செய்து துறை ரீதியிலான விசாரணை நடத்த கடிதம் எழுதியுள்ளது.