திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே இரண்டு வயது குழந்தை சுர்ஜித் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்தான்.
25.10.2019 தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பின் சுர்ஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைத்து, குழந்தை சுஜித் உடலுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சுஜித்தின் உடல், நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.