விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகில் உள்ள மேல் வாளை அடுத்த பீமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஏகாம்பரம்(40). இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவரது வீட்டு வாசலில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தது.
இதைக் கண்டு பதறிப்போன அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து அழுகையை நிறுத்தினர். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் பச்சிளம் அந்த ஆண் குழந்தையை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல அலுவலருக்கும் முகையூர் வட்டார சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரமே இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை ஆளில்லாத வீட்டு வாசலில் போட்டுவிட்டு சென்றது யார்? இந்த குழந்தை யாருக்கு பிறந்தது? இங்கு எப்படி கொண்டு வந்து போடப்பட்டது? இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.