கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்திருந்தது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கடுமையான வெப்பம் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடி, மரங்கள் கருகி காணப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் ஏராளமான மரம், செடிகள் தீயில் கருகி நாசமாகின. அதன் பின்னர் இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதே சமயம் காட்டுத் தீ காரணமாக மேல்மலை பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல 3 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (04.05.2024) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக அப்பகுதிகளுக்கு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.