
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்குள்ள ஜானகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெளியில் இருந்த டூவீலரை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டவுடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பச்சையப்பன் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, பச்சையப்பன் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை கொள்ளையர்கள் பறிக்க முயன்றனர்.
உடனடியாக பச்சையப்பனும் அவரது மகனும் கொள்ளையர்கள் நகையை பறிக்க விடாமல் தடுத்து போராடியுள்ளனர். அவர்கள் இருவரையும் கொள்ளையர்கள் தாக்க, அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனால் அக்கம் பக்கம் மக்கள் ஓடி வருவதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள், கொள்ளையர்களை துரத்திச்சென்று அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்து போலீசார் வருவதற்கு காலம் தாழ்த்தி உள்ளது. இதனால், மீண்டும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று திண்டிவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சபரிவாசன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சபரிவாசன், கொள்ளையர்களை துரத்தி சென்றுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள நகைக்கடை உட்பட பல்வேறு வீடுகளில் கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பச்சையப்பன், மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள் கூட்டமாகச் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அவர்களை பொதுமக்கள் துரத்தி உள்ள சம்பவம் கூட்டேரிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.