திருப்பூரில் ஒரே கம்பனியில் வேலை பார்த்த நண்பரிடம் உன்னுடைய மனைவி என்னுடைய காதலி என்று கூறிய இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, மதுரையைச் சேர்ந்த கேசவமூர்த்தி, அவரது வீட்டருகே இருந்த சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்பு காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அந்த பெண் வீட்டில் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த கேசவமூர்த்தி, காதலை மறக்க முடியாமல் சிங்கப்பூர் சென்று வேலைப்பார்த்து வந்துள்ளார்.
![family problem](http://image.nakkheeran.in/cdn/farfuture/NY_I6RpGjXzE6tI4hX_Jojy_u-P7tUKpmt0KWygiLwQ/1566385252/sites/default/files/inline-images/851.jpg)
ஆனாலும் பழையக் காதலை மறக்க முடியாமல் கேசவமூர்த்தி நாட்டுக்கு திரும்பி வரும் போதெல்லாம் திருப்பூருக்கு சென்று தனது காதலியை சந்தித்துள்ளார். பின்பு சிங்கப்பூர் செல்லாமல் தனது காதலியின் கணவர் பிரகாஷ் வேலை பார்க்கும் பனியன் கம்பெனியில் கேசவமூர்த்தி வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்தவுடன் பிரகாஷுடன் நட்பாக பழகியுள்ளார். இவர்களுடைய நட்பு இருவரும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளது. இந்த நிலையில் ஒரு நாள் மது குடிக்கும் போது பிரகாஷிடம் உன் மனைவியும் நானும் காதலர்கள் என்றும், அவளை நான் அழைத்து செல்லப் போகிறேன் எனவும் கூறியுள்ளார். அதைக் கேட்டு கோபமடைந்த பிரகாஷ், கேசவமூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கேசவமூர்த்தி கீழே விழுந்துள்ளார். பின்பு அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.