கோவையை சேர்ந்த 49 வயதான பெண்மணி சர்வதேச அளவிலான அழகி போட்டியில் 3ஆம் இடத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். வயதான பெண்களிடையே தன்னம்பிக்கையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தவே இந்த போட்டியில் பங்கேற்றதாக அழகி போட்டியில் வென்ற ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான பெண்ணான ஜெயஸ்ரீ . இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் Mrs.GLOBE CLASSIC என்கிற சர்வதேச அளவிலான அழகி போட்டி நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 45 வயதிற்கு மேல் உள்ள இல்லத்தரசிகள் பங்கேற்றனர். மொத்தம் 85 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் இடத்தை யூ.எஸ்.ஏ.வும், இரண்டாம் இடத்தை ஜப்பானும் மூன்றாம் இடத்தை இந்தியா சார்பில் கோவையை சேர்ந்த ஜெயஸ்ரீயும் பெற்றுள்ளார். தனிப்பட்ட விவரங்கள், ஆளுமை திறன், PHOTOSHOOTS, உடை, அறிமுகம், நேர்காணல் என 7 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில், இறுதிச்சுற்றில் ஜெயஸ்ரீ நமது பாரம்பரிய உடையான சேலையில் அணிவகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு Mrs.COIMBATORE, 2016ல் Mrs.INDIA, Mrs.INDIAN OCEAN, Mrs.PHOTOGENIC ஆகிய பட்டத்தை வென்றுள்ள ஜெயஸ்ரீ, கடந்த 23ஆண்டுகளாக உடற்பயிற்சியாளராகவும், உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வயதாக பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதும், முறையான உடற்பயிற்சி இல்லாததால் நாளடைவில் ஏற்படும் உடல் பாதிப்புகளை தடுக்கவே இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறும் ஜெயஸ்ரீ, வெற்றி, தோல்வி என்பது அவரவர் எடுக்கும் முடிவில் உள்ளதால் பெண்கள் எதையும் துணிச்சலாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளிலும், பெண்கள் உடல் ஆரோக்கியாம் குறித்து விழிப்புணர்வில் ஈடுபடுவதாக தெரிவித்தார். சர்வதேச அழகி போட்டியில் வென்றுள்ள ஜெயஸ்ரீக்கு 23 வயதில் ஓரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.