சிவகங்கையில் காட்டுப்பகுதியில் மறைந்துகொண்டு கால்நடைகளை மேய்க்க வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் வலைவிரித்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டை ஒட்டிய பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கச் செல்லும் பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுவது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் புகார் வந்தது. சிலர் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள குருந்தமபட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டுப் பகுதிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு சென்றார்.
இதுகுறித்து கல்லல் காவல் நிலைய போலீசாரிடம் அப்பெண் புகார் தெரிவித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது கல்லல் கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. ராஜ்குமார் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த சுற்றுவட்ட கிராமத்து இளைஞர்களும் தேவகோட்டை போலீசாரும் ராஜ்குமாரை பல இடங்களில் தேடி வந்தனர். நான்கு நாட்களாக நடைபெற்ற தேர்தல் வேட்டையில் தேவகோட்டை பழைய பாலம் அருகே பதுங்கி இருந்த ராஜ்குமாரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொழுது ராஜ்குமார் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்பொழுது மாவு கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தப்பட்ட விசாரணையில் தன் கண்ணில் தனியாக படும் பெண்களை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நகை பணம் வாங்கியவற்றை வழிப்பறி செய்ததையும் வாக்குமூலமாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.