Skip to main content

சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

சென்னையில் 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழக அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது.

 

இதனையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 20 ஆம் தேதி மெரினா கடற்கரையில் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து ‘பொம்மன்’ இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் ‘பாஸ் தி பால்’ எனும் கோப்பை சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து பாஸ் தி பால் கோப்பை சுற்றுப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று நேற்று முன்தினம் (01.8.2023) சென்னை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் நேற்று (02.08.2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பாஸ் தி பால் கோப்பையை வழங்கி இருந்தார்.

 

மேலும் சென்னை எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினைச் சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி திறந்து வைத்திருந்தார். இந்நிலையில் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

 

முன்னதாக ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க, சென்னைக்கு வருகை தந்த சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அணியைச் சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்