முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கிட்டதட்ட ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. தற்போது இது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அப்போலோவின் தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் மீனல் எம்.போரா என்பவரிடம் விசாரித்தபோது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ பொருத்தியபோது அவர் கண்களில் அசைவு காணப்பட்டது, மெதுவாக மூச்சு விடத் தொடங்கினார். எனக் கூறினார். மேலும் அவர் டிசம்பர் 5, 2016 அன்று அதிகாலை 3.20 மணிக்கு ஜெயலலிதாவின் இதயம் தானாக செயல்பட தொடங்கியது எனவும் கூறினார்.
அதற்கு நீதிபதி எக்மோ பொருத்தியபின் ஜெயலலிதாவிற்கு இதயத்துடிப்பு இல்லை என மற்ற மருத்துவர்கள் கூறுகிறார்களே, நீங்கள் ஏன் முரணாக கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் அதை அந்த டெக்னீசியன் மறுத்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது 4 டெக்னீசியன்கள் அங்கு இருந்தோம், மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் இதயத்திற்கு மசாஜ் செய்தோம் என டெக்னீசியன் காமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.