கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
அதே சமயம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த தொகை மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் உரிமை தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.