‘பெண் தொடர்பு! பண விவகாரம்! சிவகாசி இரட்டைக்கொலை விசாரணை தீவிரம்!’ என்னும் தலைப்பில் கடந்த 25-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தக் கொலை வழக்கில் மூவேந்தர் முன்னேற்ற கழக விருதுநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களான முருகன் மற்றும் அர்ஜுனன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. சிவகாசியில் வெவ்வேறு பகுதிகளில் ரத்தக்காயங்களுடன் இருவரும் சடலமாகக் கிடந்ததால் ஊரே பதற்றமானது. கொலையான முருகனின் மனைவி சுதாவும், அர்ஜுனன் மனைவி சத்தியாவும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவாகி, போலீஸ் நடத்திய விசாரணையில், பண விவகாரம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து காரணமாகவே இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சுதா, சத்தியா தந்த தகவல் மூலம் முதலில் விசாரணை வளையத்தில் சிக்கியவர் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தந்தைதான். அதன்பிறகே, தலைமறைவாக இருந்த பாலமுருகனை காவல்துறை கைது செய்தது.
முருகனுடனும் அர்ஜுனனுடனும் சக தொழிலாளர்களாக சுமை தூக்கும் வேலையைச் செய்து வந்தவர்கள்தான் சின்னராமுவும் வேல்முருகனும். இவர்களுக்கிடையே பணம் சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து மூக்கை நுழைத்திருக்கிறார் பாலமுருகன். தங்களுக்கு எதிராகவும் சின்னராமு, வேல்முருகனுக்கு ஆதரவாகவும் பாலமுருகன் நடந்துகொண்டது முருகனுக்கும் அர்ஜுனனுக்கும் ஆத்திரத்தை உண்டுபண்ணியது. அதுதான், பாலமுருகன், சின்னராமு மற்றும் வேல்முருகனைக் கொலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தை அறிந்த ஒருவர், சின்னராமுவிடம், உங்களைக் கொலை செய்வதற்கு முருகனும் அர்ஜுனனும் ஆயத்தமாகி விட்டதாகவும், கூலிப்படையினருக்கு பணம் கொடுத்ததாகவும் கூறி எச்சரித்திருக்கிறார்.
சின்னராமு, வேல்முருகன் மற்றும் பாலமுருகன் தரப்பு உஷாரானது. சமாதானமாகப் பேசுவோம் என்று கூறி முருகனையும் அர்ஜுனனையும் சிவகாசி கடம்பன்குளம் கண்மாய்க்கு அழைத்தது. அடர்ந்த கருவேல மரங்களால் பெரும் காடாகவே மாறிப்போன அந்தக் கண்மாயில் 24-ஆம் தேதி இரவு இருவரையும் மது அருந்தச் செய்து, போதை தலைக்கேறிய நிலையில், கத்தியாலும், பீர் பாட்டிலாலும், அங்கு சுடுகாட்டில் கிடந்த கட்டைகளாலும் மாறிமாறி தாக்கியிருக்கின்றனர். ஒருகட்டத்தில், இருவரும் செத்துவிடக்கூடாது என்று பயந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அது முடியாமல் போயிருக்கிறது.
பலத்த ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அர்ஜுனனை தனது நண்பனான சரவணகுமாரின் டூ வீலரிலும், முருகனை மற்றொரு நபரின் டூ வீலரிலும் அனுப்பியிருக்கிறார் பாலமுருகன். டூ வீலர்களில் இருவரையும் ஏற்றிச் சென்றவர்களோ, நேருகாலனியிலும், காரனேசன் காலனி முக்கு ரோட்டிலும் போட்டுவிட்டனர். ஏதோ போதையில் கிடக்கிறார்கள் என்று இரவு நேரத்தில் அந்த இரு ஏரியாக்களில் அவர்களைக் கடந்து சென்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச் சென்றுவிட, இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பிரிந்திருக்கிறது. விடிந்தபிறகே, அவை சடலங்கள் என்பதை அறிந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தந்திருக்கின்றனர்.
பாலமுருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுமை தூக்குபவர்களான சின்னராமு, சக்திவேல், வேல்முருகன், காளிராஜன், மாரீஸ்வரன், சபரீஸ்வரன் மற்றும் டிரைவர் சரவணகுமார் ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டு, சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை, நேருகாலனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. “55 ஏக்கர் பரப்பளவுள்ள கடம்பன்குளம் கண்மாய் முன்பெல்லாம் மழை நீரினால் நிறைந்திருக்கும். இந்தக் கண்மாய் நீர், பள்ளபட்டி பகுதி விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டது. பள்ளபட்டி பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கியது. இன்றோ, அரசுத்துறையினரின் அலட்சியம் காரணமாக, கண்மாய் கருவேலங்காடாகிவிட்டது. அத்தனை சமூக விரோதச் செயல்களும் இந்தக் காட்டுக்குள்தான் நடக்கின்றன. ரவுடிகளின் புகலிடமாகிவிட்டது. இதனைத் தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.” என்றனர் வேதனையோடு.
நாம் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடம் பேசினோம். “அந்தப் பகுதி மக்கள் சிவகாசி கோட்டாட்சியரிடம் மனு அளித்தால் மக்களை அச்சுறுத்தும் அந்தக் கருவேலங்காட்டை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம்.” என்று உறுதியளித்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதி காடாக மாறிப்போனதற்கும், அடிதடி, கொலை என சகலமும் நடப்பதற்கும் அரசாங்கமே காரணம் என்பதை உணர்ந்து, புதராக மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி கடம்பன்குளம் கண்மாயைத் தூர்வார வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.