அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில், விலங்கியல் ஆசிரியர் பஞ்சாபிகேஷன் மேற்பார்வையில், 'புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்' குறித்து அத்துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பல சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில், 'SCOPE PROJECT'-ன் கீழ், இயற்பியல், விலங்கியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் குறிப்பிட்ட பகுதியை எடுத்து மாணவர்கள் ஆய்வு செய்வர்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மாணவர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிவாகை சூட உதவும் ஆசிரியருக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதியன்று அரியலூர் RMSA அலுவலகத்தில் நடைபெற்ற போட்டியில், பொன்பரப்பி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, 'புகையிலை பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்' குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை கருத்தரங்கில் விளக்கினர். மிகப் பெரிய சமூகப் பிரச்னையை நேர்த்தியாக எடுத்துரைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த விலங்கியல் துறை ஆசிரியர் பஞ்சாபகேசன் அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.