பள்ளிகள் தோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்க மதுரையில் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் வளர்ப்பதற்காகவும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது.
இதை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்துவதற்காக இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு களப்பயணத்துடன் கூடிய ஒருநாள் சிறப்புப் பயிற்சி கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ.சாந்தலிங்கம் தொல்லியல், அகழாய்வு, நாணயவியல், கல்வெட்டியல் பற்றியும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பள்ளி மாணவர்களிடம் தொல்லியலில் ஆர்வத்தை உருவாக்குவது, பள்ளியில் நடத்தப்படவேண்டிய தொல்லியல் நிகழ்வுகள் பற்றியும் பேசினர். பின்னர் களப்பயணமாக கொங்கர் புளியங்குளம் மலைக்குகையின் விளிம்பில் உள்ள 3 தமிழி கல்வெட்டுகளை ராஜகுரு படித்துக் காட்டி விளக்கமளித்தார். இரு கல்வெட்டுகளில் மலை, பொன் ஆகியவற்றின் குறியீடுகள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் வியந்தனர்.
இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி அலுவலர் சொ.சவகர், பள்ளித் தலைமையாசிரியர் வ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்தனர். இப்பயிற்சியில் 46 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.