திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது திடீரென மரம் விழுந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக அவ்வப்போது சாலையில் பாறைகள் உருண்டும், மரங்கள் சரிந்தும்வருகின்றன. இந்நிலையில், இன்று (29.11.2021) காலை, தாண்டிக்குடியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசுப் பேருந்து காமணூர் வழியாக வந்துகொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் கருப்பையா, நடத்துனர் ஞானசேகர் மற்றும் 12 பயணிகள் இருந்தனர்.
பேருந்து மலை சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கொடலங்காடு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்று திடீரென சரிந்து பேருந்து மீது விழுந்தது. அதேசமயம் அந்த மரத்தின் எதிரே இருந்த மற்றொரு மரத்தின் மீது இம்மரம் தாங்கி நின்றது. இதனால், பேருந்தின் மீது மரம் முழுமையாக விழவில்லை. இருப்பினும் பேருந்தின் பின் பகுதியில் மரம் விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது. பயணி ஒருவர் மட்டும் லேசான காயமடைந்தார். பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடலங்காடு பகுதியில் அதிக போக்குவரத்து இல்லாததால் வேறு எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை. மரங்களை அகற்றி பேருந்தை மீட்கும் முயற்சியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைப் பாதையில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் மலைக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் தாண்டிக்குடியிலிருந்து கொடைக்கானல் வரை செல்லும் மலைப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப் பகுதிகளிலும் தொடர் மழையின் காரணமாக மண் சரிவு மற்றும் மரங்களும் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொடைக்கானலுக்கும், திண்டுக்கல்லுக்கும் வர முடியாமல் தவித்துவருகிறார்கள்.
மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக மலைப்பாதைகளில் ஏற்பட்டுவரும் மண்சரிவுகளையும், மலையில் விழுந்து கிடக்கும் மரங்களையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.