கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்றுமுதல் (09.08.2021) கூடுதலாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆக. 23ஆம் தேதிவரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிமாக்கிக்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று சரிந்திருந்த நிலையில், கடந்த ஒருவாரமாக மேலும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தினசரி பாதிப்பு 80க்கும் மேலாக உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (இன்று) முதல் சேலம் மாவட்டத்திலும் கரோனா கட்டுப்பாடுகள் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு: “அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், வரும் செப். 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்பு சார்ந்த கல்லூரிகள், ஆக. 16ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும். இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் பின்வரும் கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படும்.
சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து பெரு மற்றும் சிறு வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேரங்காடிகள் ஆகியவை தினமும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள், கடைகள் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
செவ்வாய்பேட்டை முதன்மை சாலை, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி சாலை, பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வ.உ.சி. அங்காடி, சின்னக்கடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்காடுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தியிருப்பதோடு, அதற்கான சான்றிதழும் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கொங்கணாபுரம், வீரகனூர் வாரச் சந்தைகள் ஆக. 23ஆம் தேதிவரை மூடப்படுகிறது.
மேட்டூர் அணை பூங்காவிற்குள் 23ஆம் தேதிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பொது இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் திறந்தவெளியில் தனித்தனி கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து கடைகளும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தொற்று பரவலைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாகத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி போட்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.