
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்ற அன்புப் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர். மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக். இதுவரை 33.23 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதேபோல் கிராமங்கள் தோறும் மரம் நடும் இளைஞர்களை ஊக்குவித்தும் வந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 'கஜா' புயல் சேதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீராக்கும் முயற்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மரம் நடும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அந்த இளைஞர்களுக்கு கடந்த ஆண்டு நடிகர் விவேக் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அதேபோல் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக 100வது நாள் மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால், கரோனா ஊரடங்கு போடப்பட்டதால் அதன் காரணமாக வர முடியவில்லை. ஆனால், இன்று நடிகர் விவேக் இறந்த செய்தி அந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரியக்குளம் கண்மாயில் மரக்கன்றுகள் நட்டதோடு வீடுகள் தோறும் மரக்கன்று நட முடிவு செய்துள்ளனர் இளைஞர்கள்.


இதுகுறித்து அந்தப்பகுதி இளைஞர் கண்ணன் கூறுகையில், ''விவேக் சார் நாங்கள் மரம் நடும் பணியைப் பாராட்டி ட்விட்டரில் எங்களை வாழ்த்தியிருந்தார். இங்கே வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் வரமுடியாமல் போய்விட்டது. தற்பொழுது ஒரு மரக்கன்றை நட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் மண்ணுக்குள் இன்று ஒரு மரக்கன்றை நட்டால்கூட அவர் நினைத்த ஒருகோடியை விட பலகோடி மரங்களை இன்று அவர் மண்ணிற்குள் செல்வதற்குள் வைக்கமுடியும் என்ற இலக்கை வைத்துள்ளோம்''என்றார்.