வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல் 4ஆம் தேதி வறண்ட வானிலையே நிலவும். வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி தரைக் காற்று வீசும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் இயல்பை விட அதிகபட்சமாக வெப்பநிலை, 3 டிகிரி செல்சியஸிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் வெப்பநிலையானது அதிகரிக்கும். இதனால் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். இதனால் நண்பகல் 12:00 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்கள் அந்த நேரத்தில் பரப்புரையைத் தவிர்க்க வேண்டும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.