சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, இந்திய அரசின் கூடுதல் செயலாளர் ராஜிந்தர் காஷ்யாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224- ன் (I) பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நிடுமோலு மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டு காலம் பதவியில் இருப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 14 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.