![Appeal in VaAppeal in Vachathi Cruelty Case; Supreme Court Actionchathi Cruelty Case; Supreme Court Action](http://image.nakkheeran.in/cdn/farfuture/zced1FuHkQKejd3iAXnacF5O9mR47cqxwpT7vFeOUxw/1697458040/sites/default/files/inline-images/a1678_2.jpg)
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின் போது, வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த கடந்த மாதம் 29 ஆம் தேதி (29.09.2023) சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது.
![Appeal in Vachathi Cruelty Case; Supreme Court Action](http://image.nakkheeran.in/cdn/farfuture/hae2wMA48dnvTP1tJlANFXtRd99cO7sobkv6qcz3pw8/1697458560/sites/default/files/inline-images/A761_6.jpg)
இந்நிலையில் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரிகள் எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகிய இருபதுக்கு மேற்பட்டவர்கள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது எல். நாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எல்.நாதனுக்கு வயதாகி இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக நீதிமன்ற சரண்டர் ஆவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் பாலாஜி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை முற்றிலும் நிராகரித்த நீதிபதி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் வரும் ஆறு வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.