இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான் அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவருகிறேன்.
விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல் ‘வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டம் வாபஸ் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு நக்கீரன் இணையத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “உண்மையாகவே சந்தோஷம்தான். பலபேர் பல சொல்லலாம், வாபஸ் வாங்கனது எலெக்சனுக்காகன்னு சொல்லலாம். ஆனால் எங்களுக்கு இது மனவலிதான். காரணம், வேளாண் சட்டங்கள் இருந்துச்சுன்னா இளைஞர்கள் எல்லாம் ஆண்மை இழந்துவிடுவார்கள். பெண்கள் எல்லாம் கருத்தறிக்க மாட்டார்கள். நான் இப்ப ஐம்பது நாளாக வீட்டுக் காவலில் இருக்கன்.
வீட்ட சுற்றி போலீஸ் போட்டுருக்காங்க. முதல்ல அது இல்லாம போயிரும். இதுனால விவசாயிகளுக்கு ஃபிரீடம் கிடைக்குது. முப்பத்து ஒன்பது நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறோம். இளைஞர் சமுதாயம் அழியாமல் காக்கப்படும் வேளாண் சட்டம் வாபஸ் வாங்குனதுனால. வருங்கால சந்ததிகள் அழிஞ்சிறக் கூடாது,. அதற்காக நாங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலுக்காக அறிவிச்சிருக்காங்கன்னு யாரு வேணாலும் எதுனாலும் பேசலாம் அது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, எல்லாமே அரசியல்தான். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இது சேஃப்கார்ட். எங்களுக்கு இந்த வேளாண் சட்டங்கள் இருந்தா எம்எஸ்பி கிடைக்காது.
தற்போது சட்டத்தை வாபஸ் வாங்கியதால் அது எங்களுக்கு கிடைக்கும். மேலும் மோடியிடம், கோதவரி மற்றும் காவரி ஆகியவற்றை இணைக்க பணம் ஒதுக்கச் சொல்ல வேண்டும் எனும் கோரிக்கை எனக்குள்ளது. இந்த வாபஸை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்ப்பார்கள். எங்களுக்கு இது வருங்கால சந்ததிகளைக் காப்பாற்ற உதவியுள்ளது. நான் இதற்காக 39 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தேன். 50 நாளா வீட்டுக் காவலில் இருக்கன். இன்னைக்கு 3 சட்டங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் இது திரும்பப் பெறப்பட்டதே பெரிய விஷயம்தான். நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துபோனார்கள். சிலரை கார் ஏற்றிக் கொன்றார்கள். மேலும், விவசாயிகளைக் கொல்லாமல் விவசாயிகளையும் காப்பாற்றியிருப்பது போதும். இந்த வெற்றிக்குக் காரணமே ஊடகங்கள்தான். அதே மாதிரி யாருமே எங்களைக் கண்டுக்காமல் இருந்தபோது நக்கீரன் மட்டும்தான் எங்கள் போராட்டங்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டது” என தெரிவித்தார்.